சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தைநிறுத்திய அதிகாரிகள்

கிருமாம்பாக்கத்தில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகத்தை அதிகாரிகள் நிறுத்தினர்.;

Update:2023-02-14 23:07 IST

பாகூர்

கிருமாம்பாக்கத்தில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகத்தை அதிகாரிகள் நிறுத்தினர்.

தரமற்ற குடிநீர் வினியோகம்

கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தின் அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த குடிநீர் கடந்த சில வாரங்களாக கலங்களாகவும், உவர்ப்பு சுவையுடனும் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் இந்த குடிநீர் தொட்டி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலும் குடிநீர் சுவையற்ற நிலையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சளி, காய்ச்சல்

இதற்கிடையில் கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி மீன் பிடிக்கப்பட்டது. இந்த குளத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தரமில்லை. எனவே அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுப்பது சில ஆண்டுகள்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தரம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நீரை குடிப்பதால் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.

மக்கள் தவிப்பு

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாகூர் பேட் பகுதியில்உள்ள குடிநீர்தொட்டியை பார்வையிட்டனர். முதல் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சோதனை செய்து, அதன் வினியோகத்துக்கு நிறுத்தினர். இதனால் இன்று மாலை முதல் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேல்நிலைநீர்தேக்க தொட்டி குடிநீர் சரியில்லாத நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் நிறுத்தியதால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்