கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை எதிரொலியாக புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.;

Update:2023-04-30 22:23 IST

புதுச்சேரி

கோடை விடுமுறை எதிரொலியாக புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோடை விடுமுறை

புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம் எனஎண்ணற்ற சுற்றுலா தலங்களும், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட ஆன்மிக தலங்களும் உள்ளன.

புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர்.

அலைமோதும் மக்கள் கூட்டம்

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகிறது. இதனால் அருகில் உள்ள கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் உள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் படகு சவாரி செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

நகரின் பிரதான வீதிகளிலும், முக்கிய சாலைகளின் இருபுறமும் கார், வேன், பஸ்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்