வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

Update: 2023-06-01 17:44 GMT

வில்லியனூர்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ஆகியோரும் பங்கேற்றனர்.

பிரமோற்சவ விழா

புதுவை மாநிலம் வில்லியனூரில் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் இரவில் சிறப்பு அலங்காரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வருகிறார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து, இழுத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார் எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். தேர் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மதியம் 12 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு தெப்பல் உற்சவமும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) முத்து பல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 4-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 5-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்