வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.;

Update:2022-06-11 21:54 IST

வில்லியனூர்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கும், சாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 6-ந் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி, நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதை தொடங்கி வைக்க வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடம் பிடித்து இழுத்தனர்

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் மாட வீதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11.30 மணிக்கு தீர்த்தவாரியும், மாலையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்