காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்
புதுச்சேரி முருங்கம்பாக்கம் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள சிக்னல் காட்சிப்பொருளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி;

அரியாங்குப்பம்
புதுச்சேரி-கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடலூர், புதுச்சேரி, வில்லியனூர் செல்வதற்கு சந்திப்பு உள்ளது. முக்கிய சந்திப்பான இந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த சிக்னல் திடீரென இயங்கவில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உயிர்பலி ஏதும் ஏற்படுவதற்கு முன் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் அங்கு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.