கடற்கரை சாலையில் அகன்ற திரையில் ஒளிபரப்பு

நிலவின் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Update: 2023-08-23 17:46 GMT

புதுச்சேரி

நிலவின் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

சந்திரயான்-3

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை புதுவை பொதுமக்கள் நேரடியாக பார்க்க அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலைக்கு எதிரே உள்ள இடத்தில் பெரிய எல்.இ.டி. திரை அமைத்து நேற்று மாலை 5 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதனை சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.சரவணன்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் பார்த்து வியந்தனர்.

கைதட்டி ஆரவாரம்

விக்ரம் லேண்டர் தரை இறங்கிய உடன் பொதுமக்கள் தேசிய கொடியை அசைத்தும், கைகளை தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொண்டனர். சிலர் ஆரவாரம் எழுப்பி தங்கள் சந்தோசத்தை தெரிவித்தனர். பின்னர் பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உரையை அமைதியாக கேட்டனர்.

இதே போல் விக்ரம் லேண்டர் தரையிரங்கும் நேரடி ஒளிபரப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தார்.

பட்டாசு வெடிப்பு

இதே போல் கருவடிக்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் அமைச்சர் நமச்சிவாயம் பார்த்தார்.

இதில் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பார்த்து வியந்தனர்.

சந்திரயான் 3 வெற்றி பெற்றதை தொடர்பு புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பு அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்