அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம்
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.;
கோட்டுச்சேரி
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.
கல்லூரி ஆண்டு விழா
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி 51-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இயற்பியல் துறை தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலாஜி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சந்திர பிரியங்கா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காரைக்காலில் பல்வேறு கட்சிகள் இருந்து வருகிறது. இருப்பினும் காரைக்காலின் முன்னேற்றத்துக்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். காரைக்காலின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.
வளர்ச்சிப்பாதை
ஒரு காலத்தில் பெண் பிள்ளைகள் படிப்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து நன்கு படித்து அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர். இன்று படிக்கும் நீங்கள் நாளைக்கு 10 பேரை வேலை வாங்கும் உயர்ந்த பதவிக்கு வருவீர்கள் என நம்பிக்கை உள்ளது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றோர் நம்மை படிக்க வைக்கிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி மாணவிகளுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.