மணல் லாரிகளை சிறைபிடித்து இளைஞர்கள் போராட்டம்

மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதை கண்டித்து லாரிகளை சிறைபிடித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-15 23:27 IST

திருநள்ளாறு

மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதை கண்டித்து லாரிகளை சிறைபிடித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர் காயம்

காரைக்கால் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 24). இவர் தனது நண்பர் இப்ராகிம் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று காரைக்கால் நோக்கி சென்றனர்.

திருநள்ளாறு சாலையில் இளையான்குடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மணல் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமன் படுகாயம் அடைந்தார்.

லாரிகள் சிறைபிடிப்பு

இதுபற்றி இப்ராகிம் சேத்தூர் பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேத்தூர் பகுதியில் திரண்டு, அந்த வழியாக வந்த 10-க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை வழிமறித்து, சிறைபிடித்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தியது குறித்து டிரைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக திருநள்ளாறு சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் விபத்தில் காயமடைந்த ராமன் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்