உலகளாவிய வர்த்தக ஸ்திர தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கும் பொருளாதாரங்கள்... பிரதமர் மோடி-ஜின்பிங் பெருமிதம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நிகழ்ச்சி தொடக்கத்தின்போது, உலக தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.;
தியான்ஜின்,
சீனாவின் தியான்ஜின் நகரில் நடப்பு ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின்பேரில், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்றார்.
அவருக்கு தியான்ஜின் விமான நிலையத்தில், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒத்துழைப்பின் வழியே நாடுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 2001-ம் ஆண்டில் உருவான இந்த அமைப்பில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறும்.
இந்நிலையில், இன்று மாலை தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடுக்கான அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி புன்சிரிப்புடன் வரவேற்றார். அப்போது ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவானும் உடன் நின்றார்.
இதன்பின்னர், நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான தருணங்களில் ஒன்றாக உலக தலைவர்கள் ஒன்றாக நின்று குடும்ப புகைப்படம் ஒன்றும் எடுத்து கொண்டனர். அதில், பிரதமர் மோடியும் இணைந்து கொண்டார். ரஷிய அதிபர் புதினும் அவர்களுடன் ஒன்றாக நின்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு இடையே, பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை விவகாரம், அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
உலகளாவிய வர்த்தகத்தில் ஸ்திர தன்மை ஏற்படுத்துவதில் இரு நாடுகளின் பொருளாதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.