மத வழிபாட்டு தலம் மீது டிரோன் தாக்குதல் - 43 பேர் பலி

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.;

Update:2025-09-19 18:58 IST

கார்டூமின்,

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு டொர்ப் மாகாணம் எல் பெஷர் நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் மீது துணை ராணுவப்படையினர் இன்று டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்