உலக காற்று தினம்

உலக காற்று தினம் ஆண்டு தோறும் ஜூன் 15-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.;

Update:2023-06-13 20:14 IST

ஐரோப்பிய காற்றாற்றல் ஆணையமும், உலகளாவிய காற்றாற்றல் மன்றமும் காற்றின் ஆற்றலை பற்றிய விழிப்புணர்வு குறித்தும், அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த தினத்தை அறிமுகம் செய்தது. முதன்முதலில் 2007-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. தூய்மையான காற்று ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. மனிதன் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும்.

காற்றானது, தாவரத்தின் விதைகளை சிதறடிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதோடு, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. புவி வெப்பமடைதல் பிரச்சினையை உலகம் சந்திக்கும் இந்த வேளையில், காற்றைப் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உபயோகிப்பது மிகவும் நன்மை பயக்கும். மேலும் காற்று அதிகமாக வீசும் இடத்தில் காற்றாலையை அமைப்பதன் மூலம், அதன் மீது படும் காற்று இறக்கையை சுழல வைத்து, இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. காற்றாலை மின்சாரமானது, மற்ற மின்உற்பத்தி முறைகளை ஒப்பிடும்போது செலவு குறைவு. கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. காற்றாலை மின்சாரம், ஒரு சுத்தமான மற்றும் நிலையான, எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத மின்சாரமாகும். ஒரு வணிக காற்றாலையை பயன் படுத்தி 600 வீடுகளூக்கு மின்சாரத்தை வழங்க முடியும். இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறனில் காற்றாலை மின்சாரம் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். காற்றின் சக்தியை வைத்து முதன்முதலில் எகிப்தியர்கள் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நைல் நதியில் தங்கள் படகுகளை செலுத்தி வணிகம் செய்துள்ளனர். இந்த நவீன உலகத்தில் காற்றானது தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மூலமாக அதிகளவில் மாசுபடுகிறது. இதனால் ஓசோன் படலம் ஓட்டை, உலக வெப்பமயமாதல், அமில மழை, மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நாளில் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் காற்றை பற்றி உரையாடும் கல்வி நிகழ்ச்சிகள், சமூக ஊடக பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. காற்றை மாசுபடுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து, மாசுபாட்டை குறைத்து சுற்றுசூழலை பாதுகாப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்