இசைக்கு மயங்காதோர் உண்டோ

இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Update: 2023-07-27 15:52 GMT

அனைவரது வாழ்க்கையிலும் இசை ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. 'ஜாக் லாங்' என்ற பிரெஞ்சு அரசியல்வாதி உலக இசை தினத்தை பற்றிய யோசனையை முதன்முதலில் முன்வைத்தார். இதை இசையமைப்பாளரான மாரிஸ் ஃப்ளூரெட்டிடம் தெரிவித்தார். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்ததினால், அவர் எடுத்த முயற்சியின் காரணமாக முதல் இசை தினம் பாரிசில் கொண்டாடப்பட்டது. இசையின் உணர்வை போற்றும் வகையிலும், இளம் தொழில்முறை இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நாள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

நம் வாழ்வின் கடினமான நேரமானாலும், மகிழ்ச்சியான நேரமானாலும் மன அமைதியை தருவதில் இசைக்கு நிகர் வேறு எதுவுமில்லை. இசையானது நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இசையின் முக்கியத்துவத்தையும், அது மனதுக்கும், உடலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைக்கவும் இந்த நாள் உதவுகிறது. இந்தநாளில் இசை ஆர்வலர்கள் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை மக்களுக்கு பூங்காக்கள், அரங்கங்களில் வழங்குகின்றனர். கலாசாரத்தை வளர்ப்பதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்கும் இசை மாபெரும் காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கவுரவிக்கும் வகையில், உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1982-ம் ஆண்டு பிரான்சில் முதல் உலக இசை தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்சில் மட்டும் கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இசையை விரும்பாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்