எதிர்காலத்தை கணித்தவர்..!

நாளை என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் அனைவருக்கும் அலாதி ஆர்வம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் உள்ளுணர்வின் உதவியோடு ஒருவர் சொல்லியிருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் ஸ்பெஷல் மனிதர்தான். அந்த சிறப்பு மனிதர், நாஸ்ட்ரடாமஸ். இவர் ஒரு மருத்துவரும் கூட!

Update: 2023-07-28 16:23 GMT

நாஸ்ட்ரடாமஸின் முதல் படைப்பு 'தி பிரொபிசியஸ்' (The Prophe cies). இது 1555-ம் ஆண்டு முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மூலம்தான் இவர் பிரபலமானார்; ஆனால் புத்தகம் பிரபலமானபோது அவர் உயிரோடு இல்லை. இவரது புத்தகத்தில், உலகில் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற பல சம்பவங்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே எழுதி வைத்திருந்தார். அத்தனையும் உண்மையாகி ஆச்சரியம் பரப்பியது.

நாஸ்ட்ரடாமஸ் 1503 டிசம்பர் 14-ம் தேதி, பிரான்சில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இலக்கணம், வானவியல், வடிவவியல், லாஜிக், எண் கணிதம் என எல்லாம் படித்தார். படிப்பை முடித்தவுடன் எட்டு ஆண்டுகள் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பெற்றோரின் விருப்பப்படி மருத்துவம் படித்தார். அப்போது ஜோதிட நூல்களை வாசித்த அவருக்கு, ஜோதிடம் மீதும் ஆர்வம் பிறந்தது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, யூத ஜோதிடர்களிடம் ஜோதிடம் பயில ஆரம்பித்தார்.

இதற்கிடையே திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. இவரது இனிய வாழ்க்கையை பிளேக் நோய் சூறையாடியது. மனைவியும், குழந்தைகளும் பிளேக் நோயால் இறந்து போக, வேதனையில் நாடோடியாகத் திரிந்தார். 1544-ம் ஆண்டு மக்ஸ்வெல் நகருக்கு வந்தார். அங்கும் பிளேக் நோய் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது. தான் தயாரித்த ரோஸ் மாத்திரையைக் கொடுத்து பலரை குணப்படுத்தினார். இதனால் நாஸ்ட்ரடாமஸின் புகழ் பரவியது. அந்நாட்டின் ராணி காத்தரீனின் மருத்துவ ஆலோசகரானார். 'ஆன்' என்ற இளம் விதவையை மறுமணம் செய்து கொண்டார்.

1565-ல் மூட்டு உபாதையால் வீட்டிலேயே முடங்கிப் போன இவர், தன்னுடைய மரணம் எப்போது நிகழும் என்பதை எழுதி வைத்தார். தான் குறித்த நாளில் 1566-ம் ஆண்டு தனது 62-வது வயதில் இறந்தும் போனார். 'தி சென்சுரீஸ்' என்ற நூல் இவர் மரணத்துக்குப் பிறகு வெளியானது. இவரது கல்லறையில் 'இங்கே புகழ்பெற்ற நாஸ்ட்ரடாமஸ் உறங்குகிறார்' என்று பொறித்திருந்தது. பிரெஞ்சுப் புரட்சியின்போது மூன்று சிப்பாய்கள் இந்தக் கல்லறையை உடைத்தார்கள். சவப்பெட்டிக்குள் இருந்த எலும்புக்கூட்டின் கழுத்தில் 'மே 1791' என்று பொறிக்கப்பட்ட டாலர் தொங்கியது.

ஒரு சிப்பாய் அந்த மண்டை ஓட்டில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது ஒரு துப்பாக்கிக் குண்டு அவனது தலையைத் துளைத்துச் சென்றது. மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் 'மே 1791' என்று அந்த டாலரில் ஏன் எழுதியிருந்தது என்பது அப்போதுதான் புரிந்தது.

குறிப்பிட்ட ஆண்டு, குறிப்பிட்ட மாதத்தில் தன்னுடைய கல்லறையை திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸ் 225 ஆண்டுகளுக்கு முன்பே தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். 'புதைகுழியை யார் திறக்கிறார்களோ... அவர்கள் உடனடியாக இறந்தும் போவார்கள்' என்றும் எழுதியிருந்தார். அதன்படி அந்த மூவரும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அவரது குறிப்புகளும், புத்தகங்களும் பெரும் ஆவலை தூண்டின. அணுகுண்டு தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பு, சுனாமி பேரழிவு, கொரோனா வைரஸ் பரவல்... என இவரது கணிப்புகள் பலவும் நிஜமாகி இருப்பதால், எதிர்காலம் குறித்து என்ன எழுதியிருக்கிறார், என்று பலரும் தேடி கொண்டிருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்