நீரிழிவு நோயை உண்டாக்கும் பழக்கங்கள்

கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் உண்டாகிறது.

Update: 2023-06-04 08:56 GMT

நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். உண்ணும் உணவை உடலானது ஆற்றலாக மாற்றுவதற்கு உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டும்.

குறிப்பாக கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் உண்டாகிறது. வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

தினமும் தயிர் சாப்பிடுவது

தயிர் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகக் கருதப்பட்டாலும், அதை தினமும் உணவில் சேர்க்க முயற்சிப்பது தவறானது. தினமும் தயிர் சாப்பிடும்படி ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை.

தினமும் தயிர் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மோசமான வளர்சிதை மாற்றத்திற்கும் வித்திடும்.

தாமதமாக சாப்பிடுவது

இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதனால் செரிமான அமைப்புக்கு போதிய நேரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இரவு உணவை அதிகமாக சாப்பிடுவதும் செரிமானம் தாமதமாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். இரவில் அதிக உணவு உட்கொள்வது கல்லீரலுக்கும் சுமையை உண்டாக்கும். வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இறுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

அதிகமாக சாப்பிடுவது

உணவை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டதாக உணர்ந்தாலும் தட்டில் இருக்கும் உணவை வீணாக்காமல் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது அதிகமாக உணவு உட்கொள்வதற்கு காரணமாகிவிடுகிறது. ஆரம்பத்திலேயே குறைவாக உணவை தட்டில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உணவை பரிமாறிக்கொள்ளலாம். அதனால் உணவு வீணாகாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்படாது. பசி நீங்கிய பிறகும் அதிகமாக சாப்பிடுவது உடல் பருமன், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

பசியின்றி உண்பது

உடலின் சமிக்ஞைகளை கவனிக்காமல் சாப்பிடும் பழக்கத்தை நிறைய பேர் கொண்டிருக்கிறார்கள். பசி எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்நாக்ஸ், ஜூஸ், பலகாரம் சாப்பிடுவார்கள். உணவும் அப்படித்தான். ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்து பசி எடுக்காவிட்டாலும் சாப்பிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள்.

இரண்டு மூன்று மணி நேரத்திற்கு இடையே பசி எடுக்காவிட்டாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனை குறைத்துவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். குடல் வீக்கத்தை அதிகரிக்கும். இறுதியில் நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்