போதை பழக்கத்தால் ஆண்டுக்கு 2½ லட்சம் பேர் உயிரிழப்பு


போதை பழக்கத்தால் ஆண்டுக்கு 2½ லட்சம் பேர் உயிரிழப்பு
x

போதை பழக்கத்தால் ஆண்டுக்கு 2½ லட்சம் பேர் உயிரிழப்பதாக காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் வேதனை தெரிவித்தார்

காரைக்கால்

போதை பழக்கத்தால் ஆண்டுக்கு 2½ லட்சம் பேர் உயிரிழப்பதாக காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் வேதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காரைக்கால் மாவட்ட காவல்துறை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து, போதை ஒழிப்புத் தினத்தை நடத்தியது. நிகழ்ச்சிக்கு காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு நித்தின் ரமேஷ், திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:-

போதை பழக்கம் கூடாது

இன்றைய நிலையில், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது. மாணவர்களுக்கு போதை பழக்கம் கூடாது. போதை பழக்கத்தால், ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கக்கூடிய இந்தப்போதை பழக்கத்தை மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் கைவிட்டு சரியான பாதையில் செல்ல வேண்டும்.

பல குற்ற பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால், பலர் போதையில் இருந்ததாகதான் குறிப்பிடப்பட்டிருக்கும். போதையில் இருந்தால் தைரியம் வரும் என சில மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொண்டு, இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அது முற்றிலும் தவறானது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன் நன்றி கூறினார்.


Next Story