கஞ்சா விற்ற 6 பட்டதாரி வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 6 பட்டதாரி வாலிபர்கள் கைது
x

பாகூர் கன்னியகோவில் பகுதியில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பாகூர்

பாகூர் கன்னியகோவில் பகுதியில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரகசிய தகவல்

புதுவையில் 'ஆபரேஷன் விடியல்' என்ற பெயரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா நடமாட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் பாகூர் அடுத்த கன்னியகோவில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசுக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மாதவன், கார்த்திகேயன் ஆகியோர் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து சோதனை போட்டதில் சிறு சிறு பொட்டலங்களாக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிக்க வைத்த போலீசார்

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நெய்வேலி இந்திராநகர் சூர்யா (23), நெய்வேலி டவுன்ஷிப் வசந்த் (21), சக்திநகர் ஜெர்விஸ் (23) என்பதும், இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா கொண்டு வந்ததும் தெரியவந்தது.

சூர்யா கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு 3 பேர் கொண்ட கும்பல் சென்னையில் இருந்து கோவைக்கு கிலோ கணக்கில் கஞ்சா எடுத்துச் செல்வது அம்பலமானது. உடனே போலீசார், சூர்யாவை கஞ்சா கடத்தல் கும்பலுடன் பேச வைத்து, அதாவது புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அதிக விலைக்கு போவதால் உடனே கூடுதலாக கஞ்சா கொண்டு வருமாறு கூற வைத்தனர். இதை நம்பி அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பாகூர் சோரியாங்குப்பம் அருகில் உள்ள மறைவான பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு மறைந்து இருந்த போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.

6½ கிலோ கஞ்சா

அவர்கள் வைத்து இருந்த சூட்கேசை சோதனையிட்டதில், 6 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எடை மிஷின், பொட்டலம் போடும் எந்திரம், பாலிதீன் பைகள் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கோபால் (22), நெய்வேலி பிளாக்-29 பகுதியில் குடியிருக்கும் பிரதாப் மோகன் (26), புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரான சந்துரு என்ற தீபராஜ் (23) நெய்வேலியை சேர்ந்த இவர்கள் தங்களது நண்பர்கள் மூலம் அறிமுகமாகி கூட்டாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 6 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் பாராட்டினார்.


Next Story