முதல்-அமைச்சர் ரங்கசாமி மாற்று அரசு அமைக்கவேண்டும்


முதல்-அமைச்சர் ரங்கசாமி மாற்று அரசு அமைக்கவேண்டும்
x

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமி மாற்று அரசு அமைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

புதுச்சேரி

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமி மாற்று அரசு அமைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நடை பயணம்

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமை மீட்போம் புதுச்சேரி மக்கள் நலன் காப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவையில் வருகிற 26-ந்தேதி வரை நடைபயணம் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி புதுவை நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான அரசானது மக்களின் நலனை மறந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அரிசிக்கு வரி போடுகிறது. கியாஸ் விலையை உயர்த்துகிறது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்கிறது. ஜனநாயகத்துக்கு எதிராக இந்திய அரசியல் சாசன சட்டத்தை நசுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

பணமும் வழங்கவில்லை

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றதும் ரேஷன்கடைகளை திறக்கப்போவதாக அறிவித்தனர். ஆனால் இலவச அரிசிக்கு பதிலாக பணம் போட கூட்டம் போட்டனர். நமது முயற்சியினால் அது தடுக்கப்பட்டது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் இலவச அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட பணமும் இப்போது வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகளில் சத்தான மதிய உணவு வழங்குகின்றனர். ஆனால் புதுவையில் அட்சய பாத்ரா என்று தொண்டு நிறுவனத்திடம் இந்த பணியை வழங்கியுள்ளனர். அவர்கள் வெங்காயம், பூண்டு இல்லாமல் உணவு தயாரித்து சுவையற்ற உணவினை வழங்குகின்றனர்.

தொடர் போராட்டம்

பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் சீருடை தரவில்லை. மாணவர் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை. ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை வழங்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

சமீபத்தில் கேரளாவில் தென்மாநில முதல்-அமைச்சர்கள் மாநாடு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது. அதில் தென்மாநில முதல்-அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆனால் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்ளவில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை. மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று புலம்புவது சரியானதல்ல.

மாற்று அரசு அமைக்க...

பீகாரில் பா.ஜ.க. மீது ஏற்பட்ட அதிருப்தியால் நிதிஷ்குமார் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக ஆட்சி அமைத்தார். அதேபோல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி தயாரா? புதுவையில் பா.ஜ.க.வை வளர்ப்பதை தவிர மக்கள் நலன் காக்கும் நோக்கம் எதுவும் பா.ஜ.க.வுக்கு இல்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நினைக்கும் திட்டத்தை அமல்படுத்த முடியாவிட்டால் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்போல் ராஜினாமா செய்துவிட்டு மாற்று அரசு அமைக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

இந்த நடைபயணத்தில் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், மூத்த தலைவர் முருகன் மற்றும் செயற்குழு, பிரதேச குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story