ரோடியர் மில் திடலில் விரைவில் விவசாய திருவிழா


ரோடியர் மில் திடலில் விரைவில் விவசாய திருவிழா
x

புதுச்சேரி ரோடியர் மில் திடலில் விரைவில் விவசாய திருவிழா நடைபெறும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வில்லியனுார்

புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4-வது வார தொடக்க விழா கரிக்கலாம்பாக்கம் லட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புதுச்சேரி ரோடியர் மில் மைதானத்தில் மலர் கண்காட்சி மற்றும் விவசாய திருவிழா விரைவில் நடத்த இருக்கிறோம். பெரிய அளவில் நடைபெறும் மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்கள் இடம்பெறும். மேலும் விவசாயிகளுக்கு தேவையான நவீன கருவிகள், இயற்கை விவசாயிகளுக்கு தனி ஸ்டால் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். அரங்கில் பசுக்கள், ஆடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மாடுகள், ஆடுகள் இடம்பெறும்.

விவசாயிகள் என்றாலே ஆடு, மாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் ரசாயான உரங்களுக்கு பதில் இயற்கை உரங்களை பயன்படுத்த முடியும். மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயத்தையும், பசு வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் தீவன புல் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேளாண் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், தேசிய காப்பீடு நிறுவன புதுச்சேரி மண்டல முதுநிலை மேலாளர் ராமச்சந்திரன், சென்னை மண்டல மேலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story