தந்தை, மகனை தாக்கி செல்போன் பறிப்பு


தந்தை, மகனை தாக்கி செல்போன் பறிப்பு
x

ஆரோவில் அருகே தந்தை, மகனை தாக்கி செல்போன் பறித்த சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானூர்

ஆரோவில் அருகே தந்தை, மகனை தாக்கி செல்போன் பறித்த சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழிப்பறி

புதுவை ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 48). இவர் சம்பவத்தன்று மாலை புதுவை தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் சஞ்சயை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

இரும்பை அடுத்த கோட்டக்கரை சாலையில் சென்றபோது திடீரென்று 8 பேர் கொண்ட கும்பல் குமரனை வழிமறித்து, பணம், செல்போனை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற குமரனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு செல்போனை பறித்துச்சென்றது. இந்த தாக்குதலில் குமரன் மற்றும் அவரது மகனும் காயமடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

6 பேர் கைது

இந்த வழிப்பறி குறித்து குமரன் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த கோட்டக்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிறுவர்கள் உள்பட 6 பேரின் அடையாளம் தெரியவந்தது.

அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார்(18), ஆகாஷ் (19), ராகுல் (19) மற்றும் 3 சிறுவர்கள் குமரனை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை கோரிமேடு போலீசார் மற்றொரு வழக்கில் கைது செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.


Next Story