பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ்


பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
x

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வேலைநிறுத்தம்

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) டிரைவர், கண்டக்டர்கள் மீது டைமிங் பிரச்சினை காரணமாக அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டது. தனியார் பஸ் ஊழியர்களின் இந்த தாக்குதலில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பி.ஆர்.டி.சி. டிரைவர், கண்டக்டர்கள் கடந்த 23-ந்தேதி மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பி.ஆர்.டி.சி. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாமல் முடங்கின. ஒரு சில நிரந்தர ஊழியர்கள் பஸ்களை இயக்க முன்வந்த போதிலும் மற்றவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர்.

பணிநீக்கம்

இதைத்தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேரை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இருந்தபோதிலும் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்தநிலையில் நிரந்தர ஊழியர்களை கொண்டு வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்தை அடைந்து வந்தனர்.

ரங்கசாமியுடன் சந்திப்பு

இன்று 7-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோருடன் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், சம்பள உயர்வு அளிக்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

பஸ்களை இயக்குங்கள்

அதைக்கேட்டுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, முதலில் பொதும க்கள் பாதிக்காதவண்ணம் பஸ்களை இயக்குங்கள் அதன்பின் உங்களது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சரின் வேண்டுகோளின்படி தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பிற்பகலில் அவர்கள் பணிக்கு திரும்பினார்கள். வழக்கம்போல டவுன் பஸ்களும் உடனடியாக இயக்கப்பட்டன.


Next Story