புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கு ஆதரவு?


புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கு ஆதரவு?
x

ஒற்றை தலைமை விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

ஒற்றை தலைமை விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழும்பியுள்ள நிலையில் கிழக்கு மாநில அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் புதுவை மேற்கு மாநில நிர்வாகிகளான முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், இணை செயலாளர்கள் மகாதேவி, திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் குணசேகர், பெரியசாமி, நாகமணி உள்ளிட்ட பலர் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்புகின்றனர். இரட்டை தலைமையில் ஒரு துரோக தனமான ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.வை பாதுகாக்கும் ஒற்றை தளபதியாக விளங்குகிறார். புதுவையில் உள்ள 56 பொதுக்குழு உறுப்பினர்களில் 46 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது தலைமையை ஏற்க வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.

மேற்கு மாநிலம்

இதேபோல் புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணை செயலாளர் காசிநாதன், துணை செயலாளர் கோவிந்தம்மாள், துணை செயலாளர் சதாசிவம், கணேசன், பொருளாளர் சங்கர் உடையார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-

பிளவு ஏற்படுத்த முயற்சி

தற்போது கழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் பிளவு ஏற்படாமல் உண்மையான விசுவாசிகள் கட்சி தொண்டர்களை பாதுகாத்து ஒற்றுமைப்படுத்த வேண்டும். மாறாக உண்மையான கட்சி தொண்டர்களிடம் பிளவு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது.

கழகத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை நம்பக்கூடாது. கழகத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தை வலுப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு கழகத்தை காக்கவேண்டும்.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.


Next Story