போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது


புதுச்சேரியில் மூதாட்டி கொன்று நகைகளை கொள்ளையடித்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் மூதாட்டி கொன்று நகைகளை கொள்ளையடித்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூதாட்டி

புதுவை சேதராப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை (வயது 72). இவர்களுக்கு ஆதிகேசவன், நாராயணன் என்ற மகன்களும், கவுரி, கண்ணகி, கனகராணி என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சின்னையன் இறந்து போனதால் உண்ணாமலை சொத்துக்களை தனது மகன்கள், மகள்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு தனியாக வசித்து வந்தார். வீட்டின் கீழத்தளத்தில் ஒரு பகுதியில் உண்ணாமலையும், மற்றொரு பகுதியில் அவரின் மகன் ஒருவரும் வசித்து வந்தனர். முதல் தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தார். மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனியாக வசித்து வந்தார்.

நகைக்காக கொலை

இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில் மர்மமான முறையில் உண்ணாமலை இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 14 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து தெரியவந்ததும் சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நகைக்காக உண்ணாமலை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியிடமே விசாரணை

அதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு ஸ்கூட்டரில் தலையில் தொப்பி அணிந்தவர் உள்பட 2 பேர் அடிக்கடி சென்று வந்தது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஸ்கூட்டரின் எண், கொலையாளிகளின் முகம் சரியாக தெரியவில்லை. இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.

அப்போது உண்ணாமலையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று பேசி பழகும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு பணியாட்களை அனுப்பும் கண்டிராக்டர் ஸ்டீபன் (37) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காண்பித்தும் கொலையாளிகளை அடையாளம் தெரிகிறதா? எனவும் அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் கொலையாளிகளை அடையாளம் தெரியவில்லை எனக்கூறி மழுப்பினார்.

காட்டிக் கொடுத்த தொப்பி

தொடர்ந்து போலீசார், அந்த பகுதியில் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காண்பித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒருசிலர் ஸ்கூட்டரில் செல்வது ஸ்டீபன் போல் இருப்பதாக தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த அன்று ஸ்டீபன் தொப்பி அணிந்து இருந்ததுடன் அடிக்கடி தொப்பியால் முகத்தை மூடியபடி இருந்ததும் தெரியவந்தது. இதை வைத்து குற்றவாளியை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து ஸ்டீபனை அழைத்து போலீசார் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நகைக்கு ஆசைப்பட்டு திருவள்ளுவர் நகரை சேர்ந்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டரின் மகனான பால பவித்ரனுடன் (26) சேர்ந்து உண்ணாமலையை கழுத்து நெரித்து கொலை செய்ததை போலீசில் வாக்குமூலமாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பரான திருவள்ளூவர் நகரை சேர்ந்த பால பவித்ரனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

போலீசுக்கு பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ராஜூவ், கோவிந்தன், ஹரிகரன், ஜெயக்குமார், இசைவேந்தன், சுப்ரமணி, சிவா ஆகியோரை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் பாராட்டினார்.


Next Story