டாக்டர்கள் பரிந்துரையின்றி நோய் எதிர்ப்பு மருந்து விற்க தடை


டாக்டர்கள் பரிந்துரையின்றி   நோய் எதிர்ப்பு மருந்து விற்க தடை
x

டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை விற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை விற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

விழிப்புணர்வு பதாகை

புதுவை அரசு மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் சிறுவர்கள், மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு அனைத்து மருந்து கடைகளிலும் விழிப்புணர்வு பதாகைகள் பொருத்தப்பட உள்ளன.

இதன்தொடக்க விழா கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டர் வல்லவன் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட, அதை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

மருந்து விற்க தடை

தொடர்ந்து கலெக்டர் வல்லவன் கூறும்போது, புதுவையில் மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்களிடையே போதைப்பழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சில வகை மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அந்த மருந்துகளை வாங்க டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகள் அவசியம். புதுவையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் எச் (ஆல்கஹால் கலந்த), எச்-1 (ஆன்டிபயாடிக்) வகை நோய் எதிர்ப்பு மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்க கூடாது. அனைத்து மருந்தகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் கூறும்போது, புதுவைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். போதைப்பொருட்கள் தாராளமாக இங்கு கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மருந்து கடைகளிலும் டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்வதில்லை என்ற விழிப்புணர்வு பதாகைகளை பொருத்தி வருகிறோம் என்றார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரியில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பது மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வல்லவன் தலைமையில் நடந்தது. இதில் புதுச்சேரியின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். போதைப்பொருட்கள் கடத்தி வருவது குறித்து கண்காணிக்கவும், பள்ளி, கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண் காணிக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story