ஆன்லைன் மருந்து விற்பனை


ஆன்லைன் மருந்து விற்பனை
x

ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் காய்கறி முதல் சாப்பாடுவரை அனைத்துமே வீடு தேடி வந்துகொண்டிருக்கும்போது மருந்தை மட்டும் அனுமதிப்பதில் என்ன தப்பு? ஆன்லைனில் வாங்கும்போது தள்ளுபடி, கூடுதல் சலுகைகள் வேறு கிடைக்கின்றனவே என்று வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்.

மருந்து வணிகர்கள் சொல்வது நேரடி மருந்து வணிகத்தில் 7.25 லட்சம் மருந்துக் கடைகள், 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வணிகம் நடப்பதாக மருந்து வணிக அமைப்புகள் சொல்கின்றன. இவ்வளவு பெரிய வருமான-வேலைவாய்ப்பு தரும் கட்டமைப்பை ஆன்லைன் மருந்து வணிகம் சின்னாபின்னமாக்கிவிடும் என்பது மருந்து வணிக அமைப்புகளின் குற்றச்சாட்டு. மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.

மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது எவ்வளவு தூரம் உண்மை? 'சார், ரெண்டு நாளா கழுத்து வலி, அதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?', 'காய்ச்சலுக்கு மருந்து இருக்குமா?' - இதுபோல டாக்டரிடம் போகாமல் நேரடியாக மருந்து வாங்கும் குரல்களை பெரும்பாலான பார்மசிகளில் கேட்கலாம். 'பிரிஸ்கிரிப்ஷன் இல்லை' என்பதால் யாருக்கும் மருந்து மறுக்கப்படுவதில்லை. அலோபதி மருந்துகளின் பக்கவிளைவுகளை, பின்விளைவுகளை பற்றி அறியாத பலரும், அப்போதைய தேவைக்காக கிடைக்கும் மாத்திரைகளை விழுங்குகிறார்கள். தூக்க மாத்திரை போன்ற ஒரு சில மருந்துகள் மட்டுமே, மருத்துவர் பரிந்துரை இல்லாததால் பார்மசிகளில் மறுக்கப்படுகின்றன. மிக பெரிய பாரம்பரிய நிறுவனங்கள் மட்டுமே மருந்துச்சீட்டு அடிப்படையில் மருந்துகளைத் தருகின்றன. தெரிந்த பார்மசி என்றால், எந்த மருந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கக் கூடிய நிலைமை உள்ளது. அரசு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இதை கண்காணிக்கின்றனவா என்பதிலும் தெளிவில்லை.

மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பி, ஆன்லைன் மூலம் மருந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படும். எழுதப்பட்ட மருந்து கிறுக்கலாக உள்ளதால், ஆன்லைன் பார்மசிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார்கள். இது உண்மைதான். ஒரெழுத்து மாறுபாட்டில் நோய்க்கான மருந்து தலைகீழாக மாறலாம். வாடிக்கையாளருக்கும் மருந்துகளை பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காது.

அதேநேரம் மருத்துவர்கள் ஏன் கிறுக்கலாக எழுத வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட மருத்துவர்களுடன், சில பார்மசிகள் புரிதலை வைத்துக்கொண்டுள்ளன. அதனால்தான் இந்த மருந்து நிச்சயமாக அங்கே கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேநேரம் ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் குறைந்துவிடும், அவசர தேவைக்குக்கூடப் பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதும் உண்மையே.


Next Story