எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த்


எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 4 Jan 2018 12:04 PM GMT (Updated: 4 Jan 2018 12:04 PM GMT)

முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து ரஜினிகாந்த் ஆசி பெற்றார். #Rajinikanth #RajiniMandram

சென்னை

ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த்தை வைத்து முதன் முதலில் 1981-ல் ராணுவ வீரன் படத்தை தயாரித்தார். தொடர்ந்து மூன்றுமுகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாஷா (1995) ஆகிய படங்களை தயாரித்தார். பாஷா பட வெற்றி விழாவில் ரஜினி பேசும் போதுதான் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி விட்டதாகவும், இதை ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும் என்றும் முதன் முதலில் அரசியல் குரல் எழுப்பினார். அவரது இந்த பேச்சு பின்னாளில் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். அவர் ஆன்மீக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

கட்சி தொடங்குவதற்கான பணியில் ரஜினி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்தார்.

இன்று மதியம் ரஜினிகாந்த் வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து ஆசி பெற்றார். தனது வீட்டுக்கு வந்த ரஜினியை ஆர்.எம்.வீரப்பன் வரவேற்று அழைத்துச் சென்றார். அவருக்கு ரஜினி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் நிலவரம் தொடர்பாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது ரஜினிக்கு ஆர்.எம்.வீரப்பன் ஆசி வழங்கியதுடன் சில ஆலோசனைகளையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Next Story