படமாகும் இஸ்ரோ விஞ்ஞானி வாழ்க்கை: நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன்


படமாகும் இஸ்ரோ விஞ்ஞானி வாழ்க்கை: நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:30 PM GMT (Updated: 16 Sep 2018 9:03 PM GMT)

படமாகும் இஸ்ரோ விஞ்ஞானி வாழ்க்கையில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க உள்ளார்.


திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற பெருமைக்குரியவரான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணையில் நம்பி நாராயணன் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 2001-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பொய் வழக்கில் தன்னை சிக்கவைத்து அவமானப்படுத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்ததில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அவர் மீது சட்டவிரோதமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து விசாரிக்க விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நம்பி நாராயணன் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. அவரது இளம்வயது வாழ்க்கை, இஸ்ரோ பணியில் நிகழ்த்திய சாதனைகள், பொய் வழக்கில் சிக்க வைக்க நடந்த வியூகங்கள், கைது நடவடிக்கைகள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெறுகிறது. இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். மூன்றுவிதமான தோற்றங்களில் அவர் வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. நடிகரும், இயக்குனருமான ஆனந்த மகாதேவன் டைரக்டு செய்கிறார். இவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2, பாபநாசம் படங்களில் நடித்தவர்.

Next Story