இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.
இந்த நிலையில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கின்றனர். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளது.
இதுபோல் சமூக வலைத்தளத்திலும் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்த்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story