பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்: “உங்களுக்கு நல்லது நடக்கும்” பாராட்டிய நடிகர் அஜித்


பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்: “உங்களுக்கு நல்லது நடக்கும்” பாராட்டிய நடிகர் அஜித்
x
தினத்தந்தி 18 April 2020 7:30 AM GMT (Updated: 18 April 2020 7:30 AM GMT)

பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள இயக்குநர் விஷ்ணு வர்தனை நடிகர் அஜித் பாராட்டி உள்ளது விஷ்ணு வர்தனை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


சென்னை,

கேங்ஸ்டர் படங்கள், ரசிகர்களை கவரும் திரில்லர் படங்கள் என ரசிகர்களின் நன் மதிப்பை பெற்ற  இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக பாலிவுட்டில்  தன் பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில் போரின் பின்னணியில் போர் நாயகனை வைத்து, உண்மைகதையை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரக்கூடியது. நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா “ஷெர்ஷா” படம் மூலம் முதல்முறையாக மிடுக்கான ராணுவ வீரராக நடிக்கவுள்ளார். “ஷெர்ஷா” படத்தின் குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு அம்சம் என்னவெனில் இந்த படம் கார்கில் போர் நடந்த பகுதிகளான கார்கில், சண்டிகர், பலம்பூர் பகுதிகளில் நேரடியாக படம்பிடிக்கப்படுகிறது.

2020 ஜூலை 3 வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர் போக்ஸ்வாலா, அஜய் ஷா மற்றும் ஹிமான்ஷு காந்தி ஆகியோர் தயாரிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் முதல்முறையாக இந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இந்தநிலையில், பாலிவுட்டில் படம் எடுக்க உள்ள இயக்குநர் விஷ்ணு வர்தனை நடிகர் அஜித், பாராட்டியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 

இயக்குநரின் பாலிவுட் அறிமுகத்தைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் அஜித் அவரை அழைத்து, தனக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இந்தி பட உலகிற்குத் தாமதமாகவே நீங்கள் சென்றுள்ளீர்கள் என்றும் அஜித் தெரிவித்தார். உங்களுக்கு உறுதியாக நல்லது நடக்கும் நடக்கும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக இயக்குநர் விஷ்ணுவர்தன் அண்மையில் அளித்த பேட்டியில், 

அஜித்துடன் நல்ல ஆரோக்கியமான நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றும், நடிகர் அஜித் மிகுந்த மரியாதைக்குரியவர் என்றும் கூறினார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் முதல் முறையாக பில்லா  படத்தில் அஜித்துடன் இணைந்தார். மேலும் இந்தப் படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை உருவாக்கியது. ஆரம்பம் படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story