போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்


போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்
x
தினத்தந்தி 26 Aug 2021 6:05 PM GMT (Updated: 2021-08-26T23:35:52+05:30)

போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்.

தெலுங்கு பட உலகில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதை பொருள் தடுப்பு போலீசார் 2017-ல் விசாரணை நடத்தி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை கைது செய்தனர். ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை பொருளையும் பறிமுதல் செய்தனர்.

பியூஸ் என்பவர் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு போதை பொருள் விற்கப்பட்டதாக கெல்வின் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமானவர்கள்.

62 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதை பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரியவந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, முமைத்கான், தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, நவ்தீப், இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்பட திரைப்பட துறையை சேர்ந்த 12 பேருக்கு அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பி உள்ளது.

ரகுல் பிரீத் சிங் அடுத்த மாதம் 6-ந் தேதியும், ராணா 8-ந் தேதியும், ரவிதேஜா 9-ந் தேதியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் யாரும் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் இதுவரை சேர்க்கப்படவில்லை.


Next Story