நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிப்பதை விட வேறு என்ன வேலை? - ரம்யா,ராஷ்மிகா மந்தனா மீது ரசிகர்கள் கோபம்


நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிப்பதை விட வேறு என்ன வேலை? -  ரம்யா,ராஷ்மிகா மந்தனா மீது ரசிகர்கள் கோபம்
x
தினத்தந்தி 28 April 2024 4:06 AM GMT (Updated: 28 April 2024 5:18 AM GMT)

நடிகை ரம்யா ஏன் ஓட்டுப்போட வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கேள்விகள் கேட்டு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள 3 தொகுதிகள் உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஏராளமான நடிகர்-நடிகைகள், பொதுமக்கள் ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்தநிலையில், தமிழ் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைஉலக ராணி என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா ஓட்டுப்போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு மண்டியாவில் ஓட்டு உள்ளது.

நேற்று முன்தினம் நடிகை ரம்யா மண்டியாவுக்கு வந்து ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓட்டுப்போட வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், கடந்த ஆண்டு(2023) நடந்த சட்டசபை தேர்தலிலும் நடிகை ரம்யா தனது வாக்குரிமையை நிறைவேற்றவில்லை. நடிகை ரம்யா இதற்கு முன்பு மண்டியா தொகுதி எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா ஏன் ஓட்டுப்போட வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கேள்விகள் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல் பிரபலமாக உள்ள இன்னொரு நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் ஓட்டுப்போடவில்லை. இவர் தமிழில் சுல்தான் மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தான் சொந்த ஊர். மைசூர் -குடகு லோக்சபா தொகுதிக்குள் வரும் விராஜ்பேட்டையில் உள்ள பூத்தில் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் இருந்தாலும் கூட அவர் ஓட்டளிக்கவில்லை. இதனால் நடிகை ரம்யா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மீது சமூகதளவாசிகள் கோபமடைந்துள்ளனர்.

தேர்தலில் ஓட்டளிக்காமல் எங்கே போனீர்கள்?. தேர்தலில் ஓட்டளிப்பதை விட வேறு என்ன வேலை இருக்கப்போகிறது? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகை ரம்யா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்துதான் அவர்களின் பெயர்களை ‛டேக்' செய்து ஓட்டுப்போடாமல் போனதற்கான காரணத்தை பலரும் கேட்டு வருகின்றனர்.


Next Story