காசோலை மோசடி வழக்கு: சினிமா பட தயாரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை


காசோலை மோசடி வழக்கு: சினிமா பட தயாரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
x

காசோலை மோசடி வழக்கில் சினிமா பட தயாரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

பாலிவுட் சினிமா பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சந்தோஷி. இவர் ஹயல், ஹடக், டமினி உள்பட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

இதனிடையே, சினிமா பட தயாரிப்பிற்காக ராஜ்குமார் சந்தோஷி குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் அசோக் லால் என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த 10 காசோலைகளில் தலா 10 லட்ச ரூபாய் என்ற முறையில் கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை தொழிலதிபர் அசோக் வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால், ராஜ்குமாரின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 10 காசோலைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜ்குமாரை தொடர்புகொள்ள தொழிலதிபர் அசோக் முயன்றுள்ளார். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக் குஜராத் ஜாம்நகர் கோர்ட்டில் ராஜ்குமார் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்குமார் காசோலை மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து குற்றவாளி ராஜ்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராஜ்குமாருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலதிபர் அசோக் லாலுக்கு தயாரிப்பாளர் ராஜ்குமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story