உலகிலேயே முதல் முறையாக... 12K தரத்தில் தயாராகும் 'ஹேராம்' திரைப்படம்...!


உலகிலேயே முதல் முறையாக... 12K தரத்தில் தயாராகும் ஹேராம் திரைப்படம்...!
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படம் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஹேராம்'. ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் கமல் தேசத்தின் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவரை கொலை செய்ய திட்டமிடும் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் காரணமாக படம் வெளியான போது பல்வேறு சர்சைகளில் சிக்கியது. மேலும் வசூல் ரீதியாக படு தோல்வியை இந்த படம் சந்தித்தது.

இதற்கிடையே கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பிரசாத் கார்ப்' இந்த படம் 12K தரத்தில் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கமல்ஹாசன் வடிவமைத்த ஹே ராம் (2000) என்னும் புகழ்பெற்ற நினைவுச்சின்னம், இப்போது 12K தரத்தில் மீண்டும் பிறந்துள்ளது. சினிமா வரலாற்றை என்றென்றும் பாதுகாத்து வருவதில் கமல்ஹாசனுடன் எப்போதும் 'பிரசாத் கார்ப்' துணை நிற்கும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் அல்லது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலிலாவது வெளியிட வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Next Story