சிறை தண்டனை வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - டைரக்டர் லிங்குசாமி


சிறை தண்டனை வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - டைரக்டர் லிங்குசாமி
x

பிரபல டைரக்டர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். படங்கள் தயாரித்தும் இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த 'எண்ணி 7 நாள்' என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருந்தது. இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன் பெற்று இருந்தனர்.அந்த கடன் தொகைக்கு காசோலை கொடுத்ததாகவும், அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறி பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

இதற்கு லிங்கசாமி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகங்களில் என்னைப்பற்றி பரபரப்பாக வரும் செய்திக்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியது என் கடமை, இந்த வழக்கு பி.வி.பி. கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ், பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த மேல்முறையீட்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.


Next Story