இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. திரைக்கதை எழுதும் கமல்


இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. திரைக்கதை எழுதும் கமல்
x
தினத்தந்தி 21 March 2024 11:16 AM GMT (Updated: 21 March 2024 12:29 PM GMT)

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் விழாவில் இளையராஜா பயோபிக் பட திரைக்கதையை தான் எழுதுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ் என்பதும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. படத்திற்கு 'இளையராஜா' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது.

படத்தின் தொடக்க வி்ழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா என திரையுலகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா இல்லை வேறு ஒருவரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் படைப்புகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், சென்னையில் `அபூர்வ சிங்கீதம்' என்கிற பெயரிலான விழாவை சென்னையில் கமல்ஹாசன் ஒருங்கிணைத்திருக்கிறார். நேற்று அந்த விழாவின் நான்காம் நாள் நிகழ்வு நடைபெற்றது. அதையொட்டி `மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு நான் திரைக்கதை எழுதுகிறேன் என்று குறிப்பிட்டார். அதைக் கேட்டதும் அரங்கிலிருந்த அனைவரும் பலத்த கரவொலியை எழுப்பினர்.

படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிற நிலையில் இந்தத் தகவல் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.


Next Story