வாடகை கொடுக்க பணம் இல்லை... சிறுவயது கஷ்டங்களை பகிர்ந்த ராஷ்மிகா
வீட்டு வாடகைக்கு கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று நடிகை ராஷ்மிகா தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பண கஷ்டங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இப்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது. அவருக்கு இப்போது பணம் கொட்டுகிறது. கர்நாடகாவில் நிறைய சொத்துகள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் வருமான வரிசோதனையும் நடந்தது. இந்த நிலையில் சிறுவயதாக இருக்கும்போது ஏற்பட்ட பண கஷ்டங்களை ராஷ்மிகா மந்தனா தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''எனது சிறுவயதில் பெற்றோர் பண நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கையில் பணம் இருக்காது. குடும்பத்தில் கஷ்டம் நிலவியது. வீட்டு வாடகை கொடுக்கவும் பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். இரு மாதங்களுக்கு ஒரு தடவை வீடு மாறும் அளவுக்கு கஷ்ட நிலைமை இருந்தது. பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மை கூட வாங்கி தர முடியவில்லை" என்றார்.