ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்க திட்டம் - சசிகலா


ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்க திட்டம் - சசிகலா
x
தினத்தந்தி 17 Jan 2023 3:10 PM IST (Updated: 17 Jan 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்கும் திட்டம் உள்ளதாக சசிகலா தெரிவித்தார்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே கவர்னர் உரை தயாரிக்கப்பட்டவுடன் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதைப் பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால், தி.மு.க. அரசு எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.

கவர்னரை எப்படி நடத்த வேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக கவர்னரை, தமிழக அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.

ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார். மக்களை ஒருபோதும் அ.தி.மு.க. ஏமாற்றியது இல்லை. வரும் காலங்களில் நன்றாக யோசித்து தி.மு.க. அரசு செயல்பட வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, தி.மு.க.வை வீழ்த்தி, அதை எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் திட்டம் உள்ளது" ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது என்று அவர் கூறினார்.


Next Story