துப்பாக்கி உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சல்மான்கான் விண்ணப்பம்
துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மும்பை,
இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர் சல்மான் கான். இவர் நேற்று மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென சென்றார்.
மும்பை போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்சால்கரை அவர் சந்தித்தார். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையில், பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.