வசந்த பாலனின் 'தலைமைச் செயலகம்' டிரைய்லர் வெளியீடு


வசந்த பாலனின் தலைமைச் செயலகம் டிரைய்லர் வெளியீடு
x

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டிரைய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


சென்னை ,

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் வெளியாகவுள்ளது.

"தலைமைச் செயலகம்" சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைமைச் செயலகம்' வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்.

"மாநில கட்சிகளை நசுக்க தான் ஊழல் குற்றச்சாட்டு", "தமிழ்நாட்ல தமிழ், தமிழ்னு சொல்லி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. இந்தி கத்துக்கிட்டா தான் என்ன?" உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெறுகின்றன.

"தலைமைச் செயலகம்" சீரிசின் டிரைய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story