விமர்சனம்
காற்றின் மொழி

காற்றின் மொழி
விதார்த் ஜோதிகா ராதா மோகன் ஏ.எச்.காஷிஃப் மகேஷ் முத்துசாமி
‘மொழி’ படத்தில் தடம் பதித்த ஜோதிகா-ராதாமோகன் இருவரும் ‘காற்றின் மொழி’யில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். கதை, பழைய ‘சூரியகாந்தி’ சாயலில் தன்னம்பிக்கை உள்ள மனைவியையும், தாழ்வுமனப்பான்மை உள்ள கணவரையும் சித்தரிக்கிறது.
Chennai
விதார்த்தும், ஜோதிகாவும் கணவர்-மனைவி. இவர்களுக்கு பள்ளிக் கூடம் செல்லும் ஒரே ஒரு மகன். சிரிப்பும், கும்மாளமுமாக இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஜோதிகாவுக்குள் வேலைக்கு போக வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறது. ‘ஹலோ எப்.எம்.’மில் அவருக்கு ஆர்.ஜே. வேலை கிடைக்கிறது.

ஜோதிகாவுக்கு ‘மது’ என்ற புனைப்பெயரில், தினமும் இரவு பத்து மணிக்கு மேல் நேயர்களுடன் கலந்துரையாடுகிற வேலை. அவருடைய வசீகர குரலும், பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் திறமையும் நிறைய ரசிகர்களை சம்பாதிக்கின்றன. பெயரும், புகழும் வந்து குவிகிறது. ஜோதிகாவின் இரவு நேர வேலையும், ரசிகர்களின் ஏடாகூடமுமான கேள்விகளும் விதார்த்துக்கு பிடிக்கவில்லை. மனைவி மீது ஒருவிதமான பொறாமையை ஏற்படுத்துகிறது. குடிக்க ஆரம்பிக்கிறார்.

இது, அவர்கள் மகனின் படிப்பை பாதிக்கிறது. ‘வீடியோ கேம்’ பார்ப்பதற்காக அப்பாவின் செல்போனை திருடுகிறான். இது, பள்ளிக்கூட முதல்வரின் காதுக்குப்போய்-அவர் அந்த சிறுவனை ‘சஸ்பெண்ட்’ செய்வதாக மிரட்டுகிறார். பயந்து போன சிறுவன் திடீரென்று காணாமல் போகிறான். மகன் காணாமல் போனதற்கு காரணம் நீதான் என்று ஜோதிகா, விதார்த் இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஜோதிகா தன் வேலையை விடுவது என்ற முடிவுக்கு வருகிறார். அவருடைய முடிவு ஏற்கப்பட்டதா, ஜோதிகா மீது விதார்த்துக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்ததா, அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வந்ததா? என்ற கேள்விகளுக்கு மீதி கதையில் பதில் இருக்கிறது.

கணவர் மீது காதல், மகன் மீது பாசம், எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இதெல்லாம் சேர்ந்த ‘சுறு சுறு’ ஜோதிகா, படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் தன் வேலை மீதான முழுமையான ஈடுபாடு, தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவர் விதார்த்தை கண்ணீர் மல்க சிரித்துக் கொண்டே சமாளிப்பது, மகன் காணாமல் போனதற்கு தானும் காரணமாகி விட்டோமோ என்ற வருத்தம் என ஒட்டு மொத்த படத்தையும் ஜோதிகா சுலபமாக சுமந்து இருக்கிறார்.

விதார்த், ஒரு சராசரி கணவராக வந்து போகிறார். தாழ்வுமனப்பான்மை கொண்ட கணவர் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ரேடியோ ஸ்டேஷனின் உயர் அதிகாரி வேடத்துக்கு லட்சுமி மஞ்சு, நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கருக்கு நடிக்க சந்தர்ப்பம் உள்ள வேடம். அவர் தன் மனைவியின் புகைப்படத்தை பார்த்து சிரிப்பதும், சிரித்துக் கொண்டே அழுவதும், நடிப்புக்கு கைதட்டல் பெறும் காட்சி.

உமா பத்மநாபனை மனோபாலா காதலுடன் பார்ப்பது, ரேடியோ ஸ்டேஷனில் ஜோதிகாவுக்கு எப்படி பேச வேண்டும்? என்று குமரவேல் கற்றுக் கொடுப்பது, தன்னை ஹஸ்கி குரலில் அழைத்த பெண்ணை தேடி மளிகைக்கடை மயில்சாமி செல்வது, ஆரவாரமான தமாஷ். சிறப்பு தோற்றத்தில் வரும் சிம்பு, “என்னிடம் லேட்டாக வந்ததற்காக ‘ஸாரி’ சொன்ன முதல் ஆள், நீங்கதான்” என்று ஜோதிகாவிடம் சொல்லும்போது, அரங்கம் அதிர்கிறது.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, காட்சிகளை வண்ணமயமாக கண்களுக்கு கடத்துகிறது. ஜிமிக்கி கம்மல் பாடலும், தென்றல் வீசியது போன்ற இதமான பின்னணி இசையும் இசையமைப்பாளர் ஏ.எச்.காஷிப்புக்கு பெயர் வாங்கி கொடுக்கும்.

படத்தின் ஒரே பலவீனம், மெதுவான கதையோட்டம். அந்த குறையை சரி செய்கிறது, ஹாஸ்யம் கலந்த வசன வரிகள். ஜோதிகாவின் “என்னால் முடியும்” என்ற தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகள், படத்தின் ஜீவனாக அமைந்து இருக்கிறது. கவித்துவமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ராதாமோகன். கதையுடன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது, டைட்டில்.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்