தேவ்


தேவ்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:36 PM GMT (Updated: 16 Feb 2019 4:36 PM GMT)

வசதியான பையனும், ஆண்களை வெறுக்கும் பெண்ணும். படம் 'தேவ்' கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல் பிரீத்சிங், டைரக்‌ஷன் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  கார்த்தி, வசதியான குடும்பத்து பையன். துணிச்சல் மிகுந்த போட்டோகிராபர். இவருக்கு குண்டு பையன் விக்னேஷ், நண்பன். அம்ருதா கிருஷ்ணன், தோழி. நண்பனையும், தோழியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காடு, மலை மற்றும் இயற்கை காட்சிகளை கார்த்தி படம் எடுக்கிறார். அவருக்குள் காதல் வரவழைக்க நண்பனும், தோழியும் ‘பேஸ்புக்’கில் ஒரு பெண்ணை தேடுகிறார்கள்.

பிடிவாத குணமும், ஆண்களை வெறுக்கும் சுபாவமும் கொண்ட ரகுல் பிரீத்சிங் கிடைக்கிறார். அவர் அமெரிக்காவில் தொழில் அதிபராக இருக்கிறார். அவருடைய அம்மா, ரம்யாகிருஷ்ணன். ரகுல் பிரீத்சிங்கின் போட்டோவை பார்த்து கார்த்திக்கு காதல் வருகிறது. ஆரம்பத்தில் கார்த்தியின் காதலை நம்ப மறுக்கும் ரகுல் பிரீத்சிங், கார்த்தியின் நல்ல குணத்தை பார்த்து காதல்வசப்படுகிறார்.

“நீ எப்போதும் என் கூடவே இருக்கணும்...என் மீது எப்போதும் காதலாக இருக்கணும்...” என்று கார்த்தியிடம், ரகுல் பிரீத்சிங் சத்தியம் வாங்குகிறார். கார்த்தியும் சத்தியம் செய்கிறார். இந்த நிலையில் கார்த்தியிடம் அவருடைய அப்பா பிரகாஷ்ராஜ், ஒரு கட்டிடம் கட்டுகிற பணியை ஒப்படைக்கிறார். அந்த வேலையில் ‘பிஸி’யாக இருக்கும் கார்த்திக்கு ரகுல் பிரீத்சிங்கை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதுவே ரகுல் பிரீத்சிங்குக்கு கோபத்தை வரவழைக்கிறது. கார்த்தியிடம் பேச மறுக்கிறார். இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

விரக்தி அடைகிற கார்த்தி, இமயமலை பயணம் மேற்கொள்கிறார். மலை மீது ஏறி சாதனை படைக்கும் அவர், பனிச்சரிவில் சிக்குகிறார். அவர் உயிர் பிழைத்தாரா, இல்லையா? ரகுல் பிரீத்சிங் மீதான அவருடைய காதல் என்னவாகிறது? என்ற கேள்விக்கு மீதி படத்தில் பதில் இருக்கிறது.

கார்த்தி, அழகான கார்த்தியாக வருகிறார். ரகுல் பிரீத்சிங் மீதான கார்த்தியின் காதலும், முகமூடி கொள்ளையர்களுடன் அவர் மோதும் சண்டை காட்சியும் ரசிக்கும்படி இருக்கிறது. இரவு நேர இயற்கை அழகை அவர் ரசிப்பதுடன், நண்பனுக்கும், தோழிக்கும் காட்டி பரவசப்படுவது, கவித்துவமான காட்சி.

ரகுல் பிரீத்சிங், கார்த்திக்கு இணையான உயரம். ஆண்களை நம்பாத கதாபாத்திரத்துக்கு பொருத்தமான முகம். கோபத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார். காதலை முகத்துக்கு கொண்டு வர தெரியவில்லை. பிரகாஷ்ராஜ் நல்ல அப்பாவாக வருகிறார். ஒரே மகன் கார்த்தி மீதான அவருடைய பாசம், நெகிழவைக்கிறது. ரம்யா கிருஷ்ணன் அம்மா வேடத்திலும் அழகு.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களை அளவோடு பயன்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை, மனதை வருடிக் கொடுக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு, வியக்க வைக்கிறது. குறிப்பாக, இமயமலை காட்சிகள் பிரமிப்பூட்டுகிறது. இரவு நேர காடுகளின் அழகை படம் பிடித்து இருக்கும் விதமும், ஆஹா!

ரஜத் ரவிஷங்கர் டைரக்டு செய்திருக்கிறார். படம் முழுக்க இரண்டு கதாபாத்திரங்கள், மாறி மாறி பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். இருப்பினும், ஒரு பயண கதைக்குள் காதலை புகுத்தி உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருப்பதற்காக, பாராட்டுகள்.

Next Story