கைவினைப் பொருட்களாக மாறும் கழிவுத் துணிகள்


கைவினைப் பொருட்களாக மாறும் கழிவுத் துணிகள்
x
தினத்தந்தி 18 April 2022 6:26 AM GMT (Updated: 18 April 2022 6:26 AM GMT)

கைவினை சார்ந்து எந்த தொழில் செய்தாலும், அதற்கு மூலப்பொருட்களும், அதற்கான பணமும் முதலீடாகத் தேவைப்படும். ஆனால், மீதமாகும் துணிகளையே முதலீடாகக் கொள்வதால், எனக்கு அந்த பிரச்சினை இல்லை.

டைகள் தைக்கும்போது மீதமாகும் சிறு சிறு துணிகளைக் கொண்டு கணினி, லேப்டாப் கவர்கள், கிண்டில் கவர்கள், ஸ்லிங் பேக், பர்ஸ் போன்றவற்றைக் கலைநயத்துடன் தயாரித்து வருகிறார் வேலூரைச் சேர்ந்த நம்ரதா.  தான் பணியாற்றி வந்த தொழில்நுட்பத் துறை சார்ந்த பணியில் சலிப்பு ஏற்படவே, சுய தொழிலில் ஈடுபட விரும்பினார். 

தையல் வேலை செய்யும் தனது பாட்டி, ஆடைகள் தைத்தது போக மீதம் இருக்கும் துணியில், முககவசம் தயாரித்ததை பார்த்தபோது பளிச்சிட்டது நம்ரதாவின் சுய தொழிலுக்கான யோசனை. இதோ அவரே தொடர்கிறார்…

‘‘எனக்கு தையல் தெரியும். என்னுடைய பாட்டியும் நன்றாகத் தைப்பார். கொரோனா நேரத்தில், அவர் தைத்தது போக, மீதமான துணிகளைக்கொண்டு முக கவசங்கள் தயாரித்து வந்தார். 
ஒரு ஆடை தயாரித்து மீதமாகும் துணியில் இருந்து 3 முககவசங்கள் வரை செய்தார். ஒரு தையல்காரரின் கழிவுத் துணியில் இருந்து, இவ்வளவு பயனுள்ள பொருட்களை உருவாக்க முடியும் என்றால், நம்மைச் சுற்றி இருக்கும் எண்ணற்ற தையல்காரர்களிடம் இருந்து வரும் கழிவுத் துணிகளைக் கொண்டு எவ்வளவு பயனுள்ள பொருட்களை உருவாக்க முடியும் என எண்ணினேன். அந்த நொடியில்தான் இது குறித்துத் தேட ஆரம்பித்தேன்.

ஒரு நொடிக்கு, ஒரு டிரக் அளவுக்கு கழிவுத் துணிகள் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. சராசரியாக, ஒரு மீட்டர் துணியில் சட்டை தைப்பதற்குப் பயன்படுவது 59 சதவீதம் மட்டுமே, மீதி 41 சதவீதம் கழிவிற்குத்தான் செல்கிறது என ஒரு ஆய்வுத் தகவலில் படித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது.

அதன்படி, மீதமான துணிகளை கழிவுகளாக கொட்டிவிடாமல், பயனுள்ளதாக மாற்றவேண்டுமென எண்ணியே என் நிறுவனத்தைத் தொடங்கினேன். முதலில், எனது குழுவில் வேலை செய்யும் பெண்
களின் உறவினர்கள், ‘கழிவுத் துணியை வைத்து செய்யும் இதெல்லாம் ஒரு வேலையா? என எதிர்மறையாகப் பேசினர். ஆனால், அந்தப் பெண்களோ, “எங்களால் சுற்றுப்புறக் கழிவு குறைகிறது. இயற்கைக்கும், வருங்கால சந்ததியினருக்கும் நாங்கள் நல்லது செய்து கொண்டிருக்கிறோம்” என  நம்பிக்கையாகப் பேசினர். இது எனக்கு மேலும் உற்சாகத்தை தந்தது.

கைவினை சார்ந்து எந்த தொழில் செய்தாலும், அதற்கு மூலப்பொருட்களும், அதற்கான பணமும் முதலீடாகத் தேவைப்படும். ஆனால், மீதமாகும் துணிகளையே முதலீடாகக் கொள்வதால், எனக்கு அந்த பிரச்சினை இல்லை. 

மேலும் தையல்காரர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களிடம் இருந்து, எனக்கான கழிவுத்துணியை சேகரித்துக் கொண்டு வருவேன்.
இன்ஸ்டாகிராம் மூலம் என் தொழிலை அறிந்து கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தையல்காரர்கள் இருவர், சுமார் 100 கிலோ மீதமான துணிகளை, தங்கள் சொந்தச் செலவில் எனக்கு அனுப்பி வைத்
தனர். ஒரு நல்ல விஷயம் செய்தால், அதற்கு பல மைல்கள் கடந்தும் மதிப்பு உண்டு என்பதை, நான் உணர்ந்து கொண்ட தருணம் அது” எனக் கூறி நெகிழ்கிறார் நம்ரதா. 

Next Story