அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர்


அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர்
x
தினத்தந்தி 26 April 2021 5:49 AM GMT (Updated: 26 April 2021 5:49 AM GMT)

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் திருமாறன் (வயது 50), அ.தி.மு.க. பிரமுகர். தொழில் அதிபரான இவர் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். தொழில் போட்டி காரணமாக இவரை 2016-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்த காரணத்தால் போலீசார் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது திருமண நாள் என்பதால் வீட்டின் அருகே இளவழகனார் தெருவில் அமைந்துள்ள செல்வமுத்துக்குமாரசாமி கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்கு சென்றார். அப்போது கோவில் வளாகத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 19), என்பவர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை திருமாறன் மீது வீசினார். முதலில் வீசிய குண்டு திருமாறன் மீது சரியாக படவில்லை என்பதால் மற்றொரு வெடிகுண்டை எடுத்து வீசினார். அந்த வெடிகுண்டு வெடித்ததில் திருமாறன் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சுட்டுக்கொலை

திருமாறனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் எழிலரசன் அந்த நாட்டு வெடி குண்டு வீசிய வாலிபர் மீது ஏ.கே.47 ரகத்தை சேர்ந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த வாலிபர் கோவில் வளாகத்திற்குள் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதில் அ.தி.மு.க. பிரமுகரின் டிரைவர் மற்றும் சாமி கும்பிடுவதற்கு வந்திருந்த ஒரு பெண் பக்தரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து கோவில் வெளியே நின்று கொண்டிருந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து திருமாறனுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் எழிலரசன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

அவரது புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

திருமாறன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் மறைமலைநகர் ரெயில் நகர் பகுதியில் வீடு வாடகை எடுத்து கடந்த ஒரு மாதமாக தங்கி திருமாறனின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளனர்.

திருமாறன் பிரதோஷம் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் செல்வ முத்துக்குமாரசாமி கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த காரணத்தால் அவரை கொலை செய்வதற்கு சரியான இடம் கோவில் வளாகம் என்று கூலிப்படையினர் தீர்மானித்து திட்டம் தீட்டி அவரை கொலை செய்துள்ளனர்.

3 தனிப்படை

கூலிப்படையை சேர்ந்த 8 பேரும் வாலிபர்கள் ஆவார்கள். கொலை நடந்த கோவில் வளாகத்திற்குள் 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா உள்ளது. கோவில் அமைந்துள்ள இளவழகனார் தெருவில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா போன்றவற்றில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் கண்டு அவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்டம் விரைந்து சென்றுள்ளனர். மேலும் கோவில் அர்ச்சகரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம், மேலும் கூலிப்படை கும்பலுக்கு முக்கிய தலைவனாக விளங்கிய நபரை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். திருமாறனின் செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்புகள் ஆய்வின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story