ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி
x
தினத்தந்தி 7 May 2019 5:31 PM GMT (Updated: 2019-05-08T02:22:42+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #IPL2019 #MIvsCSK

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் டூ பிளஸ்சிஸ் 6(11) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 5(7) ரன்களும், ஷேன் வாட்சன் 10(13) ரன்களும், ஓரளவு ரன் சேர்த்த முரளி விஜய் 26(26) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக அம்பத்தி ராயுடு, கேப்டன் டோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. மும்பை அணி, தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் சென்னை அணியின் ரன் ரேட் உயர்வதை கட்டுப்படுத்தினர்.

இறுதியில் கேப்டன் டோனி 37(29) ரன்களும், ராயுடு 42(37) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ரோகித் சர்மா 4(2) ரன்களும், டி காக் 8(12) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் சூர்ய குமார் யாதவ் 37 பந்துகளில் தனது அரைசதத்தினை பதிவு செய்தார். அடுத்ததாக இஷான் கிஷான் 28(31) ரன்களில் போல்ட் ஆகி வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய குர்ணால் பாண்ட்யா (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிறப்பாக ஆடிய சூர்ய குமார் யாதவ் 71(54) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 13(11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 18.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த சென்னை அணிக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பாக நாளை நடைபெற உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத உள்ளது. 


Next Story