இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்


இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Dec 2021 11:55 PM GMT (Updated: 25 Dec 2021 11:55 PM GMT)

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

செஞ்சூரியன், 

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி அரங்கேறுகிறது.

இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென்ஆப்பிரிக்கா தான். 7 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வெறுங்கையுடன் திரும்பிய இந்திய அணி கடைசியாக 2018-ம் ஆண்டில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்திருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்திய இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணிலும் மோசமான வரலாற்றை மாற்றி காட்டுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்துடன் வந்துள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவில் சவாலே வேகப்பந்து வீச்சு தான்.

பொதுவாக இங்குள்ள புல்தரை ஆடுகளங்களில் பந்து அதிவேகத்தில் எகிறும். உயிரோட்டமான இத்தகைய ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு (ஸ்விங்) ஏற்ப கணித்து செயல்பட வேண்டும். நெஞ்சு அளவுக்கு எழும்பி வரும் பந்துகளையோ அல்லது ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே சீறும் பந்துகளையோ சரியாக எதிர்கொள்ள தவறினால் அது பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப் பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். அதனால் பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி நிலைத்து நின்று ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியரின் தாக்குதலை சாதுர்யமாக சமாளித்து விட்டால் கணிசமாக ரன்கள் குவித்து விடலாம்.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் இறங்குவார்கள். கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி விவகாரத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியை சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதமும் அடிக்காத அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

அறிமுக டெஸ்டிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசி சாதனை படைத்ததால் மூத்த வீரர் அஜிங்யா ரஹானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி 4 வேகம், ஒரு சுழல் என்று 5 பவுலர்களுடன் களம் காண திட்டமிட்டுள்ளது. 4-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குரின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. இந்திய அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள கபில்தேவின் (434 விக்கெட்) சாதனையை முறியடிக்க சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட் தேவைப்படுகிறது. இந்த தொடரில் கபில்தேவை அவர் முந்தி விடுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், கேப்டன் டீன் எல்கர், வான்டெர் துஸ்சென் ஆகியோரையே மலைபோல் நம்பி உள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூரில் தென்ஆப்பிரிக்கா எப்போதும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் அந்த அணியில் தற்போது முன்னணி வீரர்கள் பலர் இல்லை. 2018-ம் ஆண்டில் விளையாடிய போது இருந்த டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அம்லா, மோர்னே மோர்கல், பிலாண்டர், ஸ்டெயின் உள்ளிட்டோர் ஓய்வு பெற்று விட்டனர். இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதைவிட அங்கு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சரியான சந்தர்ப்பம் அமையாது. கடந்த முறை 3 டெஸ்டிலும் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றது. அதனால் நடப்பு தொடரிலும் வெற்றியை தீர்மானிப்பதில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் இங்கு உட்கார்ந்து கொண்டு அவர்களை (இந்தியா) உலகின் சிறந்த அணி இல்லை என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். அதே சமயம் இன்னொரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். உள்ளூர் சூழலில் நிச்சயம் எங்களது கையே கொஞ்சம் ஓங்கி நிற்கும்’ என்றார்.

போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானம் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி கோட்டையாகும். இங்கு தென்ஆப்பிரிக்கா 26 டெஸ்டுகளில் விளையாடி 21-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), 3-ல் டிராவும் கண்டுள்ளது. எந்த ஆசிய அணியும் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது கிடையாது. இந்திய அணி இங்கு விளையாடியுள்ள இரு டெஸ்டுகளிலும் தோல்வியையே தழுவியது.

ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியம் என்று வர்ணிக்கப்பட்ட பிரிஸ்பேன் மைதானத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்து வரலாறு படைத்தது. அதே போல் செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு இந்தியா முட்டுக்கட்டை போடுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

போட்டியின் போது, முதல் இரு நாட்களில் மட்டும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story