ஆஷஸ் டெஸ்ட்: படுதோல்வியடைந்த இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா..!


ஆஷஸ் டெஸ்ட்: படுதோல்வியடைந்த இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா..!
x
தினத்தந்தி 28 Dec 2021 1:52 AM GMT (Updated: 28 Dec 2021 2:11 AM GMT)

ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் எடுத்தார். 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.ஸ்டோக்ஸ் மற்றும் லீச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது.

இந்த நிலையில், இன்று தொடங்கி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமரூன் கிரீன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலன்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு ‘ஜானி முல்லாக் பதக்கமும்’ வழங்கப்பட்டது.

Next Story