ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்..!!


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்..!!
x
தினத்தந்தி 9 April 2022 1:44 AM GMT (Updated: 9 April 2022 1:44 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் அணியுடன் சென்னை அணியும், பெங்களூரு அணியுடன் மும்பை அணியும் மோத உள்ளன.

மும்பை, 

வெற்றிப்பயணத்தை தொடங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? ஐதராபாத் அணியுடன் மோதல்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 3 ஆட்டங்களிலும் வரிசையாக (கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியடைந்து திண்டாடுகிறது. 

இதற்கு முன்பு எந்தவொரு ஐ.பி.எல். தொடரையும் சென்னை அணி இவ்வளவு மோசமாக தொடங்கியதில்லை. புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டிய கடுமையான நெருக்கடியில் தவிக்கிறார். சென்னை அணிக்காக அவரது 150-வது ஆட்டம் இதுவாகும். முந்தைய சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்ற தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு தடுமாறுவது (முதல் 3 ஆட்டத்தில் 0, 1, 1 ரன் மட்டுமே) பின்னடைவாக அமைந்துள்ளது. 

ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது. இதே போல் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, ஜடேஜா, பிராவோ உள்ளிட்டோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். முன்னாள் கேப்டன் டோனி இந்த முறை ஓரளவு நன்றாக (3 ஆட்டத்தில் ஒரு அரைசதம் உள்பட 89 ரன்) ஆடுகிறார். ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவும் (109 ரன்) நம்பிக்கை அளிக்கிறார். 

பந்து வீச்சில் தீபக் சாஹர் காயத்தால் அவதிப்படுவது இழப்பாகும். அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தில் மல்லுகட்டிய சென்னை அணிக்கு இந்த சீசனில் முதல் பகல் ஆட்டமாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதல் இரு லீக்கில் ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் ‘சரண்’ அடைந்தது. இதில் லக்னோவுக்கு எதிராக 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது கடைசி ஓவரில் 3 விக்கெட்டை இழந்து கோட்டை விட்டதால் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது. பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்படுகிறார்கள். 

ஆனால் பேட்டிங்கில் வில்லியம்சன், மார்க்ராம், நிகோலஸ் பூரன், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா என்று நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இன்னும் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை. இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் போராடுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 4-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.

சரிவில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்..? பெங்களூரு அணியுடன் இன்று மோதல் 

புனே, 

5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 3 ஆட்டங்களில் அதாவது டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தோற்று புள்ளி பட்டியலில் பின்தங்கி நிற்கிறது. 

மும்பை அணியில் பேட்டிங்கில் இஷான் கிஷன் (3 ஆட்டத்தில் 149 ரன்), திலக் வர்மா (121 ரன்) மட்டும் ஜொலித்துள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து கடந்த ஆட்டத்தில் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து இன்னும் தீப்பொறி ஆட்டம் வெளிப்படாதது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் ஜஸ்பிரித் பும்ரா, முருகன் அஸ்வினை தவிர டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ், பாசில் தம்பி உள்ளிட்டோர் ரன்களை வாரி வழங்குவதில் வள்ளல்களாக மாறி விட்டனர். 

சரிவில் இருந்து எழுச்சி பெற்று வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மும்பை வீரர்கள் மத்தியில் கேப்டன் ரோகித் சர்மா ஊக்கமூட்டும் விதமாக நீண்ட நேரம் பேசினார். ‘இது தொடரின் தொடக்கம் தான். அதனால் இந்த தோல்விகளால் பயப்படவேண்டியதில்லை. வெற்றியோ, தோல்வியோ அனைவரும் தான் பொறுப்பு. தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் அனைவரும் களத்தில் ஒருங்கிணைந்து துணிச்சலுடன் விளையாட வேண்டியது அவசியமாகும்’ என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 2 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அமர்க்களமான பேட்டிங்கால் பெங்களூரு அணி 170 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்தது. 

விராட் கோலி, பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அகமது என்று பேட்டிங்கில் அசத்தும் அந்த அணியில் இப்போது ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்திருப்பதால் மேலும் வலுவடைந்துள்ளது. பந்து வீச்சில் ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் கைகொடுக்கிறார்கள். எனவே பெங்களூரு அணியின் சவாலை மும்பை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

Next Story