ஐ.சி.சி. 20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 May 2022 3:09 AM GMT (Updated: 5 May 2022 3:09 AM GMT)

ஐ.சி.சி. 20 ஓவர் போட்டி வருடாந்திர தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 20 ஓவர் போட்டியில் இந்தியாவும், ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் அணிகளின் வருடாந்திர தரவரிசைபட்டியல்வெளியிடப்படுவது வழக்கம். இதில் கடந்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு அணிகளும் ஆடிய போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்படும். 

இந்த புதிய தரவரிசையில் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு முடிந்த போட்டிகளுக்கு 50 சதவீதமும், அதன் பிறகு நடந்த போட்டிகளுக்கு 100 சதவீதமும் மதிப்பளிக்கப்பட்டு தரவரிசை கணக்கிடப்பட்டு இருக்கிறது.

இதன்படி வருடாந்திர டெஸ்ட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களை வரிசையாக கைப்பற்றிய கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 9 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 128 புள்ளிகளுடன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 

இந்தியா ஒரு புள்ளி உயர்ந்து 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறது. நியூசிலாந்து (111 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளிகள்) முறையே 3-வது, 4-வது இடம் வகிக்கின்றன. பாகிஸ்தான் அணி (93 புள்ளிகள்) 5-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 9 புள்ளி குறைந்து 88 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து பெற்ற குறைந்தபட்ச புள்ளி இதுவாகும். இலங்கை (81 புள்ளி), வெஸ்ட்இண்டீஸ் (77 புள்ளி), வங்காளதேசம் (51 புள்ளி), ஜிம்பாப்வே (25 புள்ளி) முறையே 7 முதல் 10 வரையிலான இடங்களை பெற்றுள்ளன.

ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து ‘நம்பர் ஒன்’

ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி (125 புள்ளிகள்) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறது. இங்கிலாந்து (124 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (107 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இந்தியா (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா (99 புள்ளிகள்) 6-வது இடத்திலும், வங்காளதேசம் (95 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இலங்கை (87 புள்ளி) 8-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (73 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (66 புள்ளிகள்) 10-வது இடத்திலும் உள்ளன.

20 ஓவர் போட்டி தரவரிசையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா (270 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. 4 புள்ளிகளை இழந்துள்ள இங்கிலாந்து (265 புள்ளிகள்) 2-வது இடமும், பாகிஸ்தான் (261 புள்ளிகள்) 3-வது இடமும் வகிக்கின்றன. தென்ஆப்பிரிக்கா (253 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (251 புள்ளிகள்) அணிகள் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி முறையே 4-வது, 5-வது இடத்தை பிடித்தன. நியூசிலாந்து அணி (250 புள்ளிகள்) 6-வது இடத்துக்கு பின்தங்கியது.


Next Story