தமிழக மீனவர்களின் படகுகளை படிப்படியாக விடுவிப்போம் இலங்கை அரசு அறிவிப்புக்கு மீனவர்கள் வரவேற்பு


தமிழக மீனவர்களின் படகுகளை படிப்படியாக விடுவிப்போம் இலங்கை அரசு அறிவிப்புக்கு மீனவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-30T00:23:51+05:30)

நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளை படிப்படியாக விடுவிப்போம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம்,

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்தார். அப்போது பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியும் வலியுறுத்தினர்.

இலங்கை மந்திரி அறிவிப்பு

இந்நிலையில், இலங்கை மீன்துறை மந்திரி மகிந்த அமரவீரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘தமிழகத்தில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டுமானால் மீனவர்கள் இனி எல்லை தாண்டி வரமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். மேலும் சேதமான படகுகளை அவரவர்களே சரி செய்துகொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பகுதி, பகுதியாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும். முதலில் 20 படகுகளை விடுவிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு தமிழக மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், எமரிட், தேவதாஸ் ஆகியோர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 143 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story