டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: காலி மதுபாட்டில்களுடன் வந்து மனு கொடுத்த பொதுமக்கள்


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: காலி மதுபாட்டில்களுடன் வந்து மனு கொடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-03T00:52:12+05:30)

டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலி மது பாட்டில்களுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கோவை,

கோவையை அடுத்த அன்னூர் பேரூராட்சி 1–வது வார்டு அ.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் ஹரிகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

அன்னூர் சிறுமுகை ரோட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட்டு, குடியிருப்பு பகுதியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைந்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைவார்கள். மேலும் குடியிருப்பு அருகே புதிதாக மற்றொரு டாஸ்மாக் மதுக்கடை வைக்க இருப் பதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் 2 டாஸ்மாக் மதுக்கடை அமைத்தால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காலி மதுபாட்டில்களுடன் வந்து மனு

கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனு வில், கணபதி பாப்பான்தோட்டம் அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு மதுக்கடை அமைத்தால் சங்கரலிங்கனார் ரோடு, நேருநகர், இளங்கோ நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே அங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

பாரத் சேனா கோவை மாவட்ட தலைவர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ரத்தினபுரி மற்றும் நல்லாம்பாளையம் நால்ரோடு பகுதியில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அங்கு மது குடிக்க வருபவர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் சிலர் கடித்து விட்டு தகராறு செய்வதால் அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி காலை முதலே மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்குள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story