தனியார் வாகனங்கள் மூலம் குடிநீர் விற்பனை செய்ய தடை


தனியார் வாகனங்கள் மூலம் குடிநீர் விற்பனை செய்ய தடை
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 3 May 2017 6:48 PM GMT)

தனியார் வாகனங்கள் மூலம் குடிநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகரில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ், ஆணையாளர் சந்தீப் நந்தூரி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–

மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு தானாக நீங்கி விடுகிறது. அதே போல் இந்தாண்டும், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியை சமாளித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

37 நாட்களுக்கு குடிநீர்

தற்போது வைகை அணையில் 147 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்த நீரை வைத்து 12 நாட்களுக்கு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். அதுதவிர பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த நீரை இன்னும் கூடுதலாக 15 நாட்கள் என மொத்தம் மதுரை மக்களுக்கு 27 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம். அதன்பின்னும் மழை பெய்யாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் குடிநீர் வினியோகத்தை சீராக்க ரூ.30 கோடி அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் மாநகராட்சி இதில் வெறும் ரூ.10 கோடி மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள நிதியை பெற சரியான திட்டத்தை கொடுக்க வேண்டும். அதே போல் வெறும் 270 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்படும் என்று ஆணையாளர் கூறுகிறார். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே கூடுதல் குடிநீர் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாருக்கு தடை

லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை லாரி உரிமையாளர்களிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே மாநகராட்சி இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தனியார் வாகனங்கள் அதிகளவில் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். வறட்சி காலத்தில், இவர்களது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவர்களிடம் மாநகராட்சி மொத்தமாக நீரை பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இது குறித்து சட்டப்படி சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அனைவருக்கும் குடிநீர்

கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசும் போது கூறியதாவது:–

மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகத்தை மாநகராட்சி சீராக செய்ய வேண்டும். பொதுமக்களை பொறுத்தவரை குழாய்கள் மூலம் குடிநீர் பெறுவதையே விரும்புகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் குழாய் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அனைத்து பகுதி மக்களுக்கு குடிநீர் சரியாக கிடைக்கிறதா என்பதனை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். குழாய் மூலம் வழங்க முடியாத பட்சத்தில் லாரிகள் மூலம் பாராபட்சமின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story